வவுனதீவு உப பிரதேச செயலராக செயற்பட்டுவருகின்ற சுபா சதாகரன் என்பவர் காரியாலய ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மா. உதயகுமாருக்காக தேர்தல் பிரச்சாரத்திலமர்த்தியமை அம்பலத்திற்கு வந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் ஆதாரங்களுடன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாசனிலால் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரினால் மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலர் கலாமதி பத்மராஜா பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்பிரகாரம் முறையீட்டாளர் கமலதாஸ் ஐ தெரிவத்தாட்சி அலுவலரின் விசாரணைப் பிரிவு இன்று பிற்பகல் அழைத்து அவரது முறைப்பாடு தொடர்பில் மேலதிக தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.  

இதன்போது உதவி பிரதேச செயலர் சுபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகித்தர்களான அருணன் , சங்கர் கிராம சேவை உத்தியோகித்தர்களான பாலசுந்தரம் , இரட்ணதுரை ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கமலதாஸ் விசாரணை பிரிவினருக்கு தெரிவித்துள்ளார். 

மங்கிக்கட்டு , மகிழவட்டுவான் , ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களில் இவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அப்பிரதேசங்களுக்கு அலுவலக நேரத்தில் நேரடியாகச் சென்று உதயகுமாருக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இக்குற்றம் நிரூபிக்கப்படும் பட்டத்தில் இவர்கள் அனைவரும் தொழிலிழக்கும் நிலையேற்படலாம். இவர்களை இந்த இழிநிலைக்கு நிர்பந்தித்த பிரதேச செயலர் சுபா மீது அவர்களது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் ஆத்திரமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. மேலும் மண்முனை மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றபோது இவர்கள் அங்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் பாலசுந்தரம் என்பவர் வேட்பாளர் உதயகுமாரின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வருகின்றார். இவரே உதயகுமார் தனது அடியாளான சுபாவுடன் தொலைபேசியில் பேச முடியாத விடயங்களை வாய்மூலமாக தகவல் காவுனராகவும் (மெசென்சர்) செயற்பட்டு வருகின்றார். உதயகுமாரின் துண்டுப்பிசுரங்களை இவரே பிரதேச செயலகத்திற்கும் எடுத்துச் செல்கின்றார் என அறியமுடிகின்றது.

இவ்வாறு பல அபிவிருத்தி உத்தியோகித்தர்கள் செயற்பட்டு வருவதாகவும் அறியக்கிடைத்துள்ளது. அச்செயற்பாடுகள் தொடர்பான துல்லியமான தகல்களை எதிர்கட்சிகள் அவதானித்து வருவதுடன் அவை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறையிடவுள்ளனர். 

மேலும் வவுனதீவு பிரதேசத்தில் மூஸ்லிம் ஒருவருக்கு 50 ஏக்கர் காணி உதயகுமாரின் தலையீட்டினால் வழங்கப்பட்டுள்ளது. அவ்விநியோகத்தில் முரண்கள் உள்ளதை அறிந்த சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக என்ன அடிப்படையில் காணி வழங்கப்பட்டது என்ற தகவலை பெறமுற்பட்டபோதும் அதற்கான கோப்பினை பிரதேச செயலாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது. 

தேர்தல் ஒன்றை உதயகுமார் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த மோசடி தொடர்பான விபரங்கள் வெளியானால் அது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்ற காரணத்தினால் பிரதேச செயலர் குறித்த தகவல்களை வழங்குவதை தாமதித்து வருவதாக சம்பந்தப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *