சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யபோதிய ஆதாரங்கள் இருந்தபோதும் தாம் கடமையை செய்ய தவறியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்றுமுன்தினம் (19) ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியபோதே இந்த விடயம் தெரியவந்தது.
2017 முதல் 2020 ஜனவரி வரைக்கும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் நிசாந்த பிரபாத் கஸ்துரியாராச்சி நேற்றிரவு ஆணைக்குழுவில் சாட்சியளித்தார்.
2017 மார்ச் 10, அன்று கத்தான்குடி அல்லியார் சந்திப்பில் சஹ்ரான் ஹசிம் மற்றும் ரவூப் மௌலவி உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத்துல் வால் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் வாள்கள் மற்றும் பெட்றோல் குண்டை பயன்படுத்தி இந்த மோதம் இடம்பெற்றதாகவும் மோதலுக்கு பின்னர் சஹ்ரான் ஹசீம், மொஹமட் ரில்வான் ஆமீ மொஹமட், மற்றும் யூசுப் அன்னவர் ஆகியோர் தப்பியோடியதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் கடமையை பொறுப்பேற்றகும் போதும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இடம்பெற்றதாகவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிய சஹ்ரான் ஹசீம் உள்ளிட்டவர்கள் அதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இதன்போது ஆணைக்குழு அதிகாரிகள் அவர்களை கைது செய்ய ஏன் பிடியாணை உத்தரவை பெற்றுகொள்ளவில்லை என வினவினர்.
அதற்கு பதிலளித்த அவர், சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்காமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படும் வரை சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை என கூறினார்.
இது குறித்து இரசாயன பகுப்பாய்வாளருக்கு அறிவிக்கப்பட்டதா? என ஆணைக்குழு வினவியதற்கு அது தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை என அவர் பதிலளித்தார்.
இதன்போது நீதிமன்ற அறிக்கையை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, சம்பவம் குறித்த இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை 2018 ஜனவரி 30 திகதியன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டமை குறித்து அறிந்திருக்கவில்லையா? என வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு தெரியாது எனவும், அதனால் எந்தவித பிடியாணையும் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார்.
இதன்போது பதிலளித்த ஆணைக்குழு அதிகாரிகள் இரசாயன பகுப்பாய்வாளரின் ´பி´ அறிக்கையில் சஹ்ரான் மற்றும் ஏனையோரை கைது செய்ய போதுமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியது.
அதன்படி,
1. கூரிய ஆயுதங்களுடன் சட்டவிரோத கூட்டத்தில் கலந்துகொண்டமை.
2 கூரிய ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டமை
3 கிளர்ச்சியை அடக்குவதை அரசாங்க அதிகாரி ஒருவர் தடுத்தமை.
4 தன்னார்வமாக காயங்களை ஏற்படுத்தியமை.
5 ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களுடன் காயம் ஏற்படுத்தியமை.
உள்ளிட்ட கைது செய்வதற்கான விடயங்கள் ´பி´ அறிக்கையில் உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் தெரிவித்ததுடன் ஆணைக்குழுவிடம் இதுபோன்ற குற்றங்கள் தொடர்பில் தெரியபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது ஆணைக்குழு 2018 ஆம் ஆண்டு பிடியாணையுடன் சஹ்ரான் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்க கைது செய்திருக்க முடியும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவியது.
சாட்சிகள் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
அப்படியானால் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் சாட்சிகள் இல்லை என நீங்கள் கூறியது எந்த அடிப்படையில் என அதிகாரிகள் வினவிய போது அவ்வாறு தெரிவித்தமை தவறு என கூறினார்.
உங்கள் கடமையை நீங்கள் சரிவர செய்யவில்லை என்பதை உணர்கிறீர்களா? என ஆணைக்குழு வினவியதற்கு அவர் மௌனமாக இருந்தார்.
எனவே சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டவர்களை கைது செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழக்க வேண்டியிருந்திருக்காது அப்படிதானே என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.
அதற்கு பதிலளித்த அவர் நீதிமன்றத்தால் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தாம் எடுத்தாக கூறினார்.
சஹ்ரான் ஹசீம் அவருடைய சகோதரர் மொஹமட் ரில்வான் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கியிருந்த ஒல்லிகுளம் வீட்டிலிருந்து உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லையா? என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வாள்கள் உள்ளிட்ட பல கூரிய ஆயதங்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றதாகவும் அவை உயிரித்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் உள்ள பல பள்ளிவாசல்களில் கைப்பற்றப்பட்ட வாள்களுக்கு சமமானவை என அவர் கூறினார்..