நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுகின்றபோதும் தேசியப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் முழுப்பொறுப்பு நாட்டின் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது என முன்னாள் தேசிய புலனாய்வுக்கான பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளஅமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல், ஜனாதிபதி பொறுப்புக்கூறுபவராக இருக்கின்றபோதும், இவற்றை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதில் கூறவேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சாட்சியமளிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :
2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2015 வரை நாங்கள் தொடர்ச்சியாகவும் தவறாதும் புலனாய்வு தகவல்கள் மீதான ஆய்வுகளை மேற்கொண்டதுடன் பாதுகாப்பு கவுன்சில் தவறாது கூடிவந்தது. புலனாய்வுத் தகவல்களை ஆய்வு செய்யும் ஒன்றுகூடல் வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் இடம்பெற்றுவந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய புலனாய்வுக்கான பிரதானி, பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர், மற்றும் ஏனைய புலனாய்வு நிறுவனங்களின் பிரதானிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது தேசிய பாதுகாப்புக்கான பிரதானியால் பிரதான விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஒன்றுகூடல்களின்போது விரிவாக ஆராயப்படும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தேசிய புலனாய்வு பிரதானியாக உங்களுக்குமிடையே எவ்வாறான உறவு இருந்தது என விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேட்டபோது, ‘ எந்த நேரத்திலும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முடியுமாக இருந்தது , அத்துடன் தேவையேற்பட்டால் எந்நேரத்திலும் ஜனாதிபதியையும் தொடர்பு கொள்ள முடிந்தது.’
இஸ்லாமியப பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்கக்கூடிய ஏதுநிலைகள் தொடர்பான தகவல்களை எமது புலனாய்வாளர்கள் பெற்றிருந்தார்கள். இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அன்றைய பாதுகாப்புச் செயலாளர் எமக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் மீது ஈர்க்கப்படுகின்ற நபர்கள் தொடர்பான தகவல்களை நாம் திரட்டிக்கொண்டிருந்தோம். அடிப்படைவாதத்தினை ஊட்டுவதற்காக பல நாடுகளிலிருந்தும் இஸ்லாமிய போதகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சுக்களை நாம் ஆராய்து கொண்டே இருந்தோம். அவ்வாறானவர்களில் 100 பேரளவில் நாம் நாடுகடத்தியுள்ளோம்.
ஞானசார தேரர் மிதவாதியாக செயற்பட்டாரா என விசாரணைக்குழுவின் தலைவர் கேட்டபோது, அவர் மிதவாதியாக செயற்பட்டிருந்தாலும் அவரது அறிக்கைகளில் சில உண்மைகள் இருந்தது.
நீங்கள் 10 வருடகாலம் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வுக்கான பிரதானியாக இருந்துவிட்டு திடீரென பதவியை ராஜனாமா செய்ததன் பின்னணியில் ஏதாவது அரசியல் அழுத்தங்கள் இருந்தனாவா என விசாரணைக்குழுவினர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் கேட்டபோது, அவ்வாறான அழுத்தங்கள் எதுவும் இருக்கவில்லை. நான் சுயமாகவே பதவி விலகினேன். அப்போது புதிதாக பதவியேற்றிருந்த அரசாங்கத்துடன் சுதந்திரமாக செயற்படமுடியாது என அறிந்திருந்த காரணத்தினால் அவ்வாறு விலகிச் சென்றேன் என்ற அவர் 2001ம் ஆண்டுகாலப்பகுதியில் இருந்த அரசின் கீழ் தன்னால் சுயாதீனமாக செயற்படமுடியாதிருந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டினார்.