வடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டுனெ அரசியல்வாதிகள் மாத்திரமே விரும்புவதாகவும் மக்கள் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.
Daily FT என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
புலம்பெயர் தமிழர் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பற்ற நாடு என காண்பிக்க முனைகின்றனர். அதற்காக இங்குள்ள மக்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர். பயனற்ற யுத்தமொன்றில் தமது வாழ்வை தொலைத்த பெரும்பாலான முன்னாள் புலிகள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றனர். ஆனாலும் தொழில்வாய்புகள் இன்றி வறுமையிலிருக்கின்ற சில முன்னாள் புலி உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழரின் வலையில் சிக்குகின்றனர். இதனூடாக இலங்கையில் பிரச்சினை உண்டு என காண்பிக்க நினைக்கும் புலம்பெயர் தமிழரது தேவைநிறைவேறுகின்றது.
ஆனாலும் ஜனாதிபதி ராஜபக்சவில் ஆட்சியில் அதற்கு இடம்கிடையாது, ஏனென்றால் நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து எவ்வாறு காப்பது என்ற சிறந்த திட்டத்தை அவர் இராணுவத்தினருக்கு வகுத்துக்கொடுத்துள்ளார். அவர் இந்நாட்டின் பொக்கிஷம்.
புலிகளின் சித்தாந்தம் நிலைக்காது. ஆனாலும் புலிப்பிரச்சாரத்தை அவர்கள் எடுத்துச் செல்வது தங்களது சொகுசு வாழ்விற்காகவே. அப்போதுதான் அவர்கள் தமிழ் மக்களிடம் உணர்ச்சி ஊட்டி பெற்றுக்கொண்ட பணத்தை அனுபவிக்க முடியும்.
எதுவாக இருந்தாலும் நான் இங்குள்ள மக்களிடம் புலம்பெயர் தமிழரின் செய்திகளுக்கு செவிமடுக்கவேண்டியதில்லை எனவும் பிரபாகரன் மற்றும் பொட்டுவின் யுகம் மீண்டும் வராதென்பதையும் ஆயுதபோராட்டம் என்பது எதிர்காலத்தில் சாத்தியமற்றது என்பதையும் தெளிவாககூறியுள்ளேன். அவ்வாறே புலம்பெயர் தமிழரும் மக்களில் அக்கறை உண்டானால் அவர்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமாறும் பலதடவைகளில் வேண்டுதல் விடுத்துள்ளேன்.
நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கேட்கப்பட்டபோது, அவ்வாறானதொரு தாக்குதல் கோத்தபாய ஆட்சியில் இருக்கும்வரை நடைபெறாது எனவும் அவர் இந்த நாட்டை காப்பார் எனவும் அவரில் நம்பிக்கை வைக்குமாறும் கேட்டுக்கொண்டார் கேபி.
எவ்வாறு உங்களுக்கு கோத்தபாயவில் இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது, உங்கள் உயிரை காப்பாற்றியதாலா என்று கேட்கப்பட்டபோது,
ஆம். அவரை நான் நம்புகின்றேன். அவர் சிறந்ததோர் தலைவர். அவரை பலதடவைகள் சந்தித்திருக்கின்றேன். எப்போதும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான அவரது தேவை தொடர்பிலே பேசுவார். அவர் தொடர்பான தவறான தகவல்களை எடுத்துச் செல்வது அரசியல் எதிராளிகளே.
இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக கேட்கப்பட்டபோது,
பயத்தின் காரணமாக அவர்களை நான் சந்தேகக்கண்ணுடனே பார்த்தேன். ஆனால் அவர்கள் விடுமுறையில் சென்றுவரும்போது எனக்காக தங்கள் வீடுகளில் தயாரித்த இனிப்பு பண்டங்களை எடுத்துவருவார்கள். இவ்வாறுதான் நாங்கள் உறவை கட்டியெழும்பினோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்கின்றோம்.
உங்களுடைய கடந்த காலத்தை ப்பற்றி வருந்துகின்றீர்களா என்று கேட்கப்பட்டபோது,
ஆம், எனக்கு இப்போது 64 வயது, 40 வருடங்களை பெறுமதியற்ற யுத்தமொன்றுக்காக செலவிட்டுவிட்டேன். ஆனால் தற்போது கோத்தபாய அவர்களின் கருணையால் சிறந்ததோர் வாழ்வை பெற்றுக்கொண்டுள்ளேன். ஆனால் நாங்கள் எங்களுடைய நிலையை அன்று மாற்றிக்கொள்ளாததால்தான் இன்று அநேகம் மக்கள் அல்லப்படுகின்றார்கள் என்பதற்காக மனம்வருந்துகின்றேன்.