யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தன்னுடைய 06 வயது, 10 வயதுடைய பிள்ளைகள் மற்றும் மனைவி மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் 10 வயது பிள்ளையை காலில் கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் தலைகீழாக கட்டி இறக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிய அடுத்து அயலவர்கள் இணைந்து குறித்த பிள்ளையை கிணற்றிலிருந்து மீட்டதுடன் தாய், பிள்ளைகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்,குறித்த நபர் முதல் நாள் இரவு போதையில் வந்ததாகவும் மறு நாள் வீட்டில் இருந்த 400.00 ரூபா பணத்தினைக் காணவில்லை என்று தெரிவித்தே மனைவிமீதும் பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை மற்றொரு கணவன், தன்னுடைய மனைவியின் தாயாருடைய தொலைபேசியை திருடிச் சென்று விற்று போதைப்பொருள் பாவித்துள்ளதுடன், வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் ஆறு மாதக் குழந்தை மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அந்த சம்பவத்தில் ஆறுமாதக் குழந்தையின் உதடு உடைந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.