கோத்தாவின் சிந்தனைக்குக் கடந்த 40 வருடமாகச் செயல் வடிவம் கொடுத்து வருகிறது முள்ளி. கோத்தபாய றாஜபக்ச இராணுவ சிப்பாயாக இருந்த காலத்திலிருந்து இன்று இந்த நிலைக்கு உயர்த்தி சென்றது முள்ளி மண்.
கோட்டபாய இராணுவ சிப்பாயாக இருந்தபோது வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை முள்ளி பகுதியில் ஆரம்பித்து இருந்தார். குறித்த தனது யுத்தத்தினை முள்ளிவாய்கால் பகுதியில் அவர் முடித்து வைத்திருந்தார்.
தற்போது கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கும்போது முள்ளி பகுதியில் அவருடைய பெறாமகன் நாமல் றாஜபக்ச அவருடைய அரச கொள்கைக்கு முதலாவது அடிகல்லை அதே முள்ளி பகுதியில் நாட்டி உள்ளார்.
முள்ளி பகுதியில் பல எதிர்ப்புகளின் மத்தியில் குறித்த தொழில்பேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில்பேட்டைக்கு யாழ் குடநாட்டில் எவருமே நிலத்தைக் கொடுக்க முன்வராத நிலையில் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மண்பற்றும் தீவிரமாக அபிவிருத்தி அடையவேண்டும் என்ற கொள்கையும் உடைய வல்லிபுரம் நடராஜா என்பவர் தனது நிலத்தைக் குறித்த அவிருத்தி தேவைக்குக் கொடுத்துள்ளார்.
வல்லிபுரம் நடராஜா என்பவரின் சிந்தனை ஓட்டபடி யாழ் அபிவிருத்தியை நோக்கி நகர வேண்டும் என்பதற்காகத் தனது பூர்வீக நிலத்தைக் குறித்த தொழில்பேட்டைக்கு மிகவும் சிறு தொகை பணத்திற்கு கரவெட்டி பிரதேச சபைக்குக் கொடுத்த அந்த நல்ல உள்ளம் படைத்தவர் மதிக்கப்படவேண்டியவர்.
வல்லிபுரம் நடராஜா எடுத்த முடிவின் காரணமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஊடாக குப்பை மேடாக இருக்கும் யாழ் குடாநாடு இனி சுத்தமாகும் என்று அறிய முடிகிறது.
கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் யாழ் குடநாட்டில் வீசப்படும் குப்பைகள் அனைத்தும் இனி மீள் சுழற்சி மூலம் பயன்படுத்தப்படலாம் என்று அனைவரும் பூரிப்பு அடைந்துள்ளனர்.
இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பலர் எதிர்த்தபோது வல்லிபுரம் நடராஜா காணி கொடுத்துக் குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஆனால் அதனை எதிர்த்த சுமந்திரனும் சித்தார்த்தனும் இன்று வல்லிபுரம் நடராஜாவின் காணிக்குள் வந்து றிபன் ரெட்டி படம் எடுத்தனர்.
இதனை பாத்தபோது உடையாரின் செலவில் சடையார் வானம் விட்ட கதையாக இருந்தது.
இன்று மாலை 4 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இராசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.