இனிமேலும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது…. மே 18க்குப் பின்னான பெருங் குழப்பங்களுக்குக் காரணம் அவன்தான்….. ஜேர்மனி வாகிசன்தான் காரணம் என படபடத்த குரலில் தொடங்கினார்…..
மேற்கொண்டு முகிலன் தொடர்வதற்கு முன்பாக,……… யார் இந்த முகிலன்? பிரான்சில் அகதி வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1990 இன் நடுப்பகுதிகளில் தானும் தனது நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு பிரான்ஸ் நாட்டுக் கிளையின் பணிமனையோடு தொடர்பு கொண்டு நாதன் என்கிற பெயரில் தன்னுடைய வேலையைத் (நாட்டுப் பணி) தொடங்குகிறார். தமிழீழத்தில் அமைதிக்கான முன்னெடுப்புக் காலம் தொடங்கிய பின்னர் தன்னை அமைப்போடும் நாட்டோடும் மேலும் நெருக்கிக் கொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடு திரும்பி பொறுப்பாளர் கஸ்ரோ அவர்களைக் கண்ட பின்பு நந்தவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். நந்தவன பணி தொடர்பாக சில நாட்கள் புளியங்குள ஆயப்பகுதியிலும் வேலை பார்த்தவர். பின்னர் பொறுப்பாளரின் கட்டளைப்படி அதே ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டு, பயிற்சி முகாமிலிருந்து மயூரனாக இலட்சியக் கனவைத் தாங்கி வெளியேறுகிறார்.
வெளியேறிய மயூரன் தனது இயக்க வேலையை ஒருசில வருடங்கள் நாட்டிலிருந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட பொறுப்பாளர் இவரை வெளிநாட்டுக் கிளையொன்றுக்குப் போடுவதற்கு முடிவெடுக்கிறார். அதன்படி 2007 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளியேறி முகிலன் என்கிற பெயரில் நோர்வே நாட்டுக் கிளையின் பொறுப்பாளராகிறார்……. இவை முகிலனின் மறு ஆய்வுடனான தனது அறிமுகப்படுத்தல் உரையாடலில் இருந்து.
இனி முகிலன் தொடர்கிறார்…… வெளியில எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது. முள்ளிவாய்க்காலைப் போல எந்த ஆமியும் இங்கு படையெடுக்கல்ல….. தடை செய்த குண்டுகள வீசி எதையும் அழிக்கவுமில்ல…. யாரையும் கொல்லவுமில்ல…….. என்று தழுதழுத்த குரலில் தொடங்கினார்.
மே 18க்குப் பிறகு நெடியவன் ஒரு முடிவை எல்லாக் கிளைக்கும் அறிவித்திருக்கலாம். ஆனா அதை அவர் செய்யல்ல, அவர் கிளைப் பொறுப்பாளர்கள் மட்டுமில்லாம செயல்பாட்டாளர்கள், அமைப்புக்கு சம்மந்தமில்லாத வெளியாட்கள், ஏன் தனது சொந்தங்களிடமும் கருத்துக் கேட்க ஆரம்பித்து விட்டார். கருத்துக் கேட்கிற நேரமா அது……….? அனைவருமே, நானும்தான் – இயக்கத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ யோசிக்கல்ல. யோசிக்கிற நிலமையிலயா இருந்தோம்? இப்போதுதான் ஜேர்மனி வாகிசன் முக்கிய பங்கை எடுக்கிறார். அவர்தான், இப்ப நாட்டில ஒன்றும் மிஞ்சி இருக்காது, இயக்கத்தின் பிரிவுகள், கட்டமைப்புக்கள் எல்லாம் சிதைஞ்சு போச்சு, பிரிவுகளில் இருந்து யாராவது தப்பினாலும் ஒருவர் அல்லது இருவர்தான் தப்பியிருக்க முடியும். அவர்களால் இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அனைத்துலகத் தொடர்பகம்தான் நாட்டிலிருந்ததைத் தவிர கட்டுடையாமல் உள்ளது. எனவே நாம்தான் இயக்கப் பொறுப்பை எடுக்கவேணும். தலைவர் வீரச்சாவடைந்திருந்தாலும் அதை அறிவித்தால் எங்கட சனம் காசு தராது, பயமும் போய்விடும். எனவே, தலைவருடைய வீரச்சாவை யார் அறிவிக்க முனைந்தாலும் நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும். ஏனெனில் எம்மிடம்தான் ஊடகம், பணம் மற்றும் பரப்புரைக் கட்டமைப்புக்களும் உள்ளன…….. அப்பாடா, எனக்கும் சரியாகத்தான் பட்டது. எல்லோரும் இறங்கிவிட்டோம் செயலில்……. என்று தொடர்ந்தார் முகிலன்.
குழப்பங்கள்தான் நீண்டு கொண்டே போகிறது. மக்களின் அவலங்களை பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் என்னால் இருக்க முடியாது என்பதாலும் அமைப்பு பலப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களோடு கதைக்கிறேன். இன்னமொன்று முக்கியமானது, ஆமிட்ட சரணடைந்து காம்பிலிருந்து வெளியேறி வந்த அறிவையும் கலையழகனையுந்தான் வாகீசனின் அறிவுறுத்தலுக்கமைய எங்களுக்கெல்லாம் பொறுப்பாய்ப் போடப்பட்டுள்ளது. கிளைகளுக்கும் புதிது புதிதாய்ப் பொறுப்பாளர்கள். இவர்கள் யாரால் நியமிக்கப் படுகிறார்கள். எனக்கு இவற்றில் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்துள்ளது, தேவைப்படுமாயின் அதையும் உடைப்பேன் என்று முடித்தார் நோர்வே கிளைப் பொறுப்பாளர் முகிலன்.
மக்களே இது முகிலனின் தவிப்பு. உள்ளத் திறப்பு. மற்றவர்களும் விரைவில் மனம் திறப்பார்கள்.