யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்குசொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.