நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் அத்துடன் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் அண்மையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், அரசியல்வாதிகள், சமூவ ஆர்வலர்கள், பொது அமைப்புகளும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
சிறுமியின் மரணம் தொடர்பிர் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், பல்வேறு தரப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
ரிஷாட் பதியுதீன் மனைவியிடம் நேற்று மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.