பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈடுபாடுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை பெறவும், எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கவும் அந்த அமைப்புக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பதே இந்த புலனாய்வு அமைப்புகளின் முக்கிய நோக்கம் என கூறப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கை ஒரு மூலோபாய இடமாக பார்க்கப்படுகிறது. பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக சில நாடுகளால் இலங்கை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

போரின் போது, ​​அரச உயர்மட்ட கூட்டங்களை அவர்கள் பதிவு செய்யலாமென்ற அச்சம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூடிய சந்திப்புகளைத் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்புக்களால் தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடக அமைச்சரும் அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகளை, குறிப்பாக இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் இருக்கும்போது அவர்களைக் கண்டறிவது கடினம் என்று கூறினார்.

எவ்வாறாயினும், உள்ளூர் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்தவொரு வெளிநாட்டவராலும் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருந்தால் இலங்கை அதிகாரிகள் அதற்கு எதிராக செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *