நாட்டில் கொரோனா தொற்று அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன ,
இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி இல்லை. பூசைகள் பக்தர்கள் பங்குபற்றுதல் இன்றி நடைபெறும். சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம் மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
ஆலய உள்வீதியில் மட்டுமே பூஜைகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்தி கடன் நிறைவேற்றுதல் என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் விசேட தனியார், அரசு போக்குவரத்து சேவை இடம் பெறுவதற்கு அனுமதி இல்லை.
ஆலய சுற்றாடலில் வீதிகளில் மண்டகப்படிவைத்தல், பிரசாதம் வைத்தல், தாக சாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி, தூக்கு காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களின் போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பான சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்படுவதால் இவ்வருடம் மேற்படி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலய சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியார்கள் மற்றும் பொது மக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலைநிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆலய சூழலில் இயங்கிவந்த இரண்டு கடைகள் மாத்திரம் தொடர்ந்தும் இயங்கி வருவதற்கு அனுமதிக்கப்படும். எனினும் இயங்கி வரும் வியாபார நிலையங்களை விரிவாக்க அனுமதி இல்லை.
ஆலய சூழலிலுள்ள வெற்று காணிகளிலோ அல்லது கட்டடங்களிலோ புதிய கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதுடன் நடமாடும் வியாபாரமும் அனுமதிக்கப்படமாட்டாது. ஆலய பூசைகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து பாதைகள் தடைப்படுத்தப்படும் போது பிரயாணிகள் மாற்றுவழிப்பாதையினை பிரயோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதார அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் சுகாதார சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அத்துடன் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியினால் கூறப்பட்ட சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய பூசைகாலங்களில் ஆலய சுற்றாடல்களில் இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய பக்த அடியார்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாயவனை வணங்கி அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.