பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் சுமார் 35 தமிழர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இவா்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் தேசிய அவை, பிரத்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து கனடா தமிழ் இளையோர் அமைப்புக்கள், உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிவரூபன் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளார்.
2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. புலிகளுன் தொடர்புள்ளதாக இந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.